கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது! பாஜக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!  - Seithipunal
Seithipunal


காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்துக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரான வகையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்துக்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

வெள்ளப் பெருக்கின்போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு, 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அதிமுக ஆட்சிக்காலத்தில் 14-02-2021 அன்று நடைபெற்றது.

இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டத்துக்கு தமிழகம் ஒப்புதல் தரவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழகத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்.

சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவிரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளைக் கட்டக்கூடாது என்பதுதான். இதற்குக் காரணம், காவிரி ஆற்றின் மேல்படுகையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் அணைகளைக் கட்டினால், காவிரி ஆற்றின் கீழ்ப் படுகையில் அமைந்துள்ள தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபடும் என்பதால்தான் தமிழகத்தின் அனுமதி பெறாமல் அணைகளை கட்டக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும்போது அதனை தமிழகம் எதிர்க்கிறது. இதற்குக் காரணம், புதிய அணைகளைக் கட்டும்போது, தமிழகத்துக்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாக குறையும்.

அதே சமயத்தில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக, தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படுமே தவிர, கர்நாடகாவுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது. எனவே, தமிழகத்துக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு. இதன்மூலம், உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழக மக்களுக்கு பயன்படக்கூடாது என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

சென்னை - மைசூர் மாகாணங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறி, வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு திருப்பி எடுத்துச் செல்லும் திட்டம் உட்பட தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. இந்த மனு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

எனவே, தமிழக முதல்வர் இதில், உடனடியாக கவனம் செலுத்தி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு தடை கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk chief OPS condemns Karnataka BJP Govt to Cauvery dam issues


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->