அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்..!
Lokesh Kanagaraj to make his debut as a hero in the action film directed by Arun Matheswaran
'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருவதால் இவர் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
தற்போது 'சூப்பர் ஸ்டார்' ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார். மேலும், தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், "வன்முறை மட்டும்தான்" எனத் தெரிவித்துள்ளார். இதனால், இணையவாசிகள் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Lokesh Kanagaraj to make his debut as a hero in the action film directed by Arun Matheswaran