ஜூலை 01 முதல் மின் கட்டணம் உயர்வு: வீடுகளுக்கு இல்லை, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உயர்வு..!
No increase in electricity rates for homes increase for industries and commercial establishments
ஜூலை 01 முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலில் வருகிறது. தமிழக அரசு மானியம் கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தமிழக அரசு ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது.
அதன்படி 2025 - 26 ஆண்டிற்கு ஜூலை 1 முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொது மக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று கொண்டு அதற்கான மானியத்தொகையை தமிழக மின்சார வாரியத்துக்கு வழங்கும்.
-lcrzf.png)
மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயம், விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
புதிய மின்கட்டண சலுகைகள்:
01. இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.51.41 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 34 லட்சம் சிறுவணிக மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
02. 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால் ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
03. குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
04. விசைத்தறி நுகர்வோர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனைவார்கள்.
-ymb2r.png)
2025- 26 ம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி தமிழகத்தில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத்தொகையை மின்சார வாரியத்துக்கு, தமிழக அரசு வழங்கும்.
பெரிய தொழில், தொழில் வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழக ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்தபடி 3.16 சதவீதம் மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும். என்று அந்த அறிக்கையில் சிவசங்கர் கூறியுள்ளார்.
English Summary
No increase in electricity rates for homes increase for industries and commercial establishments