மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஏமாற்றம்..அதிமுக குற்றச்சாட்டு!
A huge disappointment in government reservations in medical colleges AIADMKs accusation
புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் இடங்களை பெறுவதில் இந்தாண்டும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து தனியார் மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியிலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாகவும், 35 சதவீத இடங்கள் நிர்வாக இட ஒதுக்கீடு வழங்கவும் உரிய சட்டம் கொண்டு வந்தனர். அது தற்போதைய தமிழக ஆட்சியிலும் இதே நிலை தொடர்கிறது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சிலின் உத்தரவின் படி குறைந்தபட்சம் 50 சதவீத இடங்களை பெறுவதற்கு கூட எவ்விதம் முயற்சியும் செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்து பேசி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 325 இடங்கள் குறைந்தபட்சம் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 242 இடங்கள் மட்டுமே அரசின் இடொதுக்கீடாகவும், நீதிமன்ற உத்தரின்படி கூடுதலாக ஒரு தனியார் கல்லூரியில் இருந்து 13 இடங்கள் சேர்த்து 255 இடங்கள் இந்த ஆண்டு பெறப்பட்டது. 325 இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டிய நிலையில் 70 இடங்கள் குறைத்து பெற்று அந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மொத்தமுள்ள 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டிற்கு நான்கு லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து ரூ.4,50,000 கட்டணம் ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 15 லட்சம் ஆண்டு கட்டணமாகவும், என்ஆர்ஐ கோட்டாலுக்கு 27 லட்சம் கட்டணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வேறு தலைப்புகளில் 60,000 ரூபாய் வரை பெறலாம் என்றும் அதற்கு மேல் எந்த கல்லூரியும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.16 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 22 லட்சம் வரைக்கும் இப்பொழுது கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதிமுக மற்றும், பெற்றோர், மாணவர்கள் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போது கூடுதல் கட்டண வசதிக்கப்பட்டது நிரூபனம் ஆகியுள்ளது. இப்படிப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் மீது இந்த அரசு இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் மாணவர்களை ஏமாற்றி மனம் போன போக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
புதுச்சேரியில் மருததுவ கல்லூரி மாணவர்களுக்கான அரசு இட ஒதுக்கீடு பெறுவதில் இந்த அரசு நிர்வாகம் தள்ளாட்டத்துடனே செயல்படுகிறது. துணைநிலை ஆளுநரிடமும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். துணை ஆளுநர் அவர்கள் மக்கள் நலன் சம்பந்தமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்துகிறார். ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடங்களை பெற துணைநிலை ஆளுநரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தனியர் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50% இடங்களை பெற சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கொள்முதலில் ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் கமிஷனாக அரசு உயரதிகாரிகளும், முதல்வரும் பெறுவதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திமுகவின் அமைப்பாளர் தசிவா ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறினார். ஏற்கனவே டெண்டர் விட்டவருக்கு மீண்டும் அரிசி வினியோகம் செய்ய அனுமதிக்க கூடாது என்றும், அரிசியில் கமிஷன் பெறுவதை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். ஒருமாத காலம் ஆகியும் திமுக அறிவித்தபடி போராட்டம் நடத்தப்படவில்லை. கமிஷன் பெறுவதாக திமுக தெரிவித்த குற்ச்சாட்டு முடிவிற்கு வந்துவிட்டதா. இல்லையெனில் திமுக சார்பில் ஏன் போரட்டம் நடத்தப்படவில்லை என திமுக அமைப்பாளர் சிவா மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
English Summary
A huge disappointment in government reservations in medical colleges AIADMKs accusation