'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைவுக்கு இரங்கல்...!- முதலமைச்சர் மற்றும் இபிஎஸ்
Condolences passing away Abhinaya Saraswathi Sarojadevi Chief Minister and EPS
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி :
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி அவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
English Summary
Condolences passing away Abhinaya Saraswathi Sarojadevi Chief Minister and EPS