பொதுமக்களுக்கு எச்சரிக்கை: ‘ஆன்லைன்' மோசடி சம்பவங்கள் அதிகரிப்பு: உஷாராக இருக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்..!
Police Commissioner advises public to be vigilant as online fraud incidents increase
ஆன்லைன் முதலீட்டு என்ற பெயரில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பாவி பொது மக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மைகாலமாக ‘ஆன்லைன்' முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்' பிரிவில் ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அதிகமான புகார்கள் வந்துள்ளன.

இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி ‘வாட்ஸ்அப்'குழுவில் சேர்த்து, பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி, பணத்தை செலுத்த தூண்டுகின்றனர்.
மோசடியாளர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லாபம் வழங்குவது போல் குறைந்த தொகையை எடுக்க அனுமதிக்கின்றனர். இதில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர், அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுத்துக்கின்றனர். இதனால் பொதுமக்களை, மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனர்.

இதில் பொதுமக்கள், மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பும் வங்கி கணக்குகள் அனைத்தும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடையது இல்லை. மேலும் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு, ‘செபி' விதிமுறைப்படி எந்தவொரு ரசீதோ, ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை. அதோடு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமோ, செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமோ இதுபோன்ற ‘வாட்ஸ்அப்' குழுக்கள், அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள், அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ‘ஆன்லைன்' முதலீட்டு விளம்பரங்களை நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Police Commissioner advises public to be vigilant as online fraud incidents increase