மக்களே உஷார்! சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி!
A four year old boy died due to dengue fever in Chennai
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் முறையாக நிறைவடையாததால் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அடுத்த மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த அய்யனார் சௌமியா தம்பதியினர். இவர்களின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த 6ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பலமுறை புகார் அளித்தும் சாலைகளில் தேங்கிய கழிவு நீரை முறையாக அகற்றாத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும், சாலைகளில் தேங்கி உள்ள நீரை முறையாக அகற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
A four year old boy died due to dengue fever in Chennai