தேன்கனிக்கோட்டை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை...!
8 year old girl harassment near Thenkani Kottai 3 special teams formed and intensive search operation
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிய 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த அந்த 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை மாலை பள்ளி வகுப்புகள் முடிந்ததும், சக மாணவர்களுடன் சேர்ந்து நடந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வழியில் மற்ற குழந்தைகள் தங்களது வீடுகளுக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் தனியாக நடந்து சென்றுள்ளார்.அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக அருகிலிருந்த புதர் மற்றும் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சிறுமி வீட்டிற்கு திரும்பியதும், நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்துள்ளார்.சிறுமியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், குழந்தைகளுக்கான உதவி எண் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்று இரவு அவசர ஊர்தி மூலம் சிறுமி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மறுநாள் காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை மேற்கொண்டனர்.சிறுமியை தாக்கி கொடூர செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் 3 தனிப்படைகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதி, சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய வழித்தடம் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
8 year old girl harassment near Thenkani Kottai 3 special teams formed and intensive search operation