மீண்டும் இயக்குநர் அவதாரம்! விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே ஆசைப்பட்டேன்.. குற்றப்பரம்பரை இயக்குவது பற்றி சசிகுமார் ஓபன் டாக்!
had this wish while Vijayakanth was still alive Sasikumar speaks openly about directing Kuttraparambarai
நடிப்பில் தொடர்ந்து பிஸியாக இருந்து வந்த சசிகுமார், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்கிறார். இயக்குநராக அவர் அறிமுகமான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து ‘குற்றப்பரம்பரை’ வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.
சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டாகவே ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், தற்போது அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று சசிகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரசிகர்கள் இன்றும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை கொண்டாடி வருவதால், அதன் மீதான எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பாதிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சசிகுமார் ரசிகர்களுக்கு மற்றொரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். ‘குற்றப்பரம்பரை’க்குப் பிறகு மதுரையை மையமாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கான கதை ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், அந்தப் படம் ‘சுப்ரமணியபுரம்’ பாணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சசிகுமார் மீண்டும் தனது பழைய பாணியில் மதுரையின் பின்னணியில் ஒரு அழுத்தமான கதையை உருவாக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் தாண்டி, சசிகுமாரின் நீண்ட நாள் கனவாக இருப்பது மதுரையில் நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்குவது.
இதற்கான ஆராய்ச்சிப் பணிகளையும் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் ‘குற்றப்பரம்பரை’, மறுபுறம் மதுரையை மையமாகக் கொண்ட புதிய திரைப்படம், அதற்கு அடுத்ததாக கள்ளழகர் நிகழ்வை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட படத்திற்கான கனவு என சசிகுமார் அடுத்தடுத்து பல திட்டங்களை வைத்திருக்கிறார்.
‘சுப்ரமணியபுரம்’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமார், மீண்டும் இயக்குநர் களத்தில் தனது பழைய ஆட்டத்தை தொடங்குகிறாரா என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
had this wish while Vijayakanth was still alive Sasikumar speaks openly about directing Kuttraparambarai