தாலாட்டு மெட்டு... குத்துப்பாடலாக மாறியது! மணிரத்னம் படத்துக்காக இளையராஜா செய்த மேஜிக்!
A lullaby tune transformed into a peppy dance number The magic Ilaiyaraaja created for a Mani Ratnam film
இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பல பாடல்களுக்கு பின்னால் சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நிலா அது வானத்து மேலே’ பாடலின் பின்னணியும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற ‘நிலா அது வானத்து மேலே’ பாடல், அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இன்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக இருந்து வருகிறது.
இந்தப் பாடலில் ஜனகராஜ் மற்றும் குயிலி இணைந்து நடனமாடியிருப்பார்கள். படத்தின் பரபரப்பான ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும்.ஆனால், இந்தப் பாடலின் ஆரம்ப வடிவம் இப்படியொரு உற்சாகமான குத்துப்பாடலாக இல்லை என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
இளையராஜா ஒரு பேட்டியில் தெரிவித்த தகவலின்படி, ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலுக்குப் பதிலாக பயன்படுத்துவதற்காக முதலில் ஒரு தாலாட்டு மெட்டாக இந்த டியூன் உருவாக்கப்பட்டதாம்.
ஆனால் படத்தின் குறிப்பிட்ட காட்சிக்கும் சூழ்நிலைக்கும் அந்த மெட்டு பொருத்தமாக அமையவில்லை. இதையடுத்து அதே மெட்டுக்கு முற்றிலும் வேறுபட்ட இசை வடிவத்தை கொடுத்து, அதை உற்சாகமான குத்துப்பாடலாக மாற்றியுள்ளார் இளையராஜா.
அப்படித்தான் தாலாட்டு மெட்டாக உருவான அந்த இசை, பின்னர் ‘நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலாக ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளது.
ஒரே மெட்டு, இசை வடிவம் மாற்றப்பட்டதும் முற்றிலும் வேறொரு உணர்வை கொடுக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தின் கதை, நடிப்பு, இயக்கம் ஆகியவற்றுடன் இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
தாலாட்டாக பிறந்து... குத்துப்பாடலாக மாறி... தலைமுறைகளை தாண்டி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த ‘நிலா அது வானத்து மேலே’ பாடலின் பின்னணி, இளையராஜாவின் இசை மேதமைக்கு மற்றொரு சுவாரஸ்யமான சான்றாக அமைந்துள்ளது.
English Summary
A lullaby tune transformed into a peppy dance number The magic Ilaiyaraaja created for a Mani Ratnam film