சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் விஜய்யின் உடனடி அப்பாயிண்ட்மென்ட்! அப்பாயிண்மென்ட் கிடைக்க அந்த மாஜிதான் காரணமா?
Vijay grants an immediate appointment only to Singai Ramachandran Was that former leader the reason for securing the appointment
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு, முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யை உடனடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்களுக்கே விஜய்யின் நேரடி சந்திப்பு உடனடியாக கிடைக்காத நிலையில், சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் இந்த முக்கியத்துவம் கிடைத்தது ஏன் என்பதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய வேண்டும் என்று விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு உடனடியாக விஜய்யின் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காததால், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர்கள் தவெகவில் இணைந்தனர்.
குறிப்பாக சி. விஜயபாஸ்கர், விஜய்யை நேரில் சந்தித்த பிறகே கட்சியில் இணைய வேண்டும் என விரும்பியதாகவும், அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் மாமல்லபுரத்தில் தனியாக இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகைய சூழலில்தான், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளரான சிங்கை ராமசந்திரன் தவெகவில் இணைந்ததும் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சிங்கை ராமசந்திரன் பொறியியல் படிப்பை முடித்ததுடன், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ படித்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவர், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதிமுக பிளவுபட்ட காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக இருந்த சிங்கை ராமசந்திரன், பின்னர் இரு அணிகளும் இணைந்தபோது அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்தார். சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டல் அரசியல் களத்தில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதாக கூறப்படுகிறது.2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
தவெகவை பொறுத்தவரை எதிர்கால அரசியலில் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், சிங்கை ராமசந்திரனின் அனுபவத்தை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச இ-சேவை மையங்களை அமைத்தது உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிமுக ஐடி விங் செயல்பாடுகளிலும் அவரது பங்களிப்பு இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, தவெகவின் தொழில்நுட்ப அணியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், StartupTN தலைமைச் செயல் அதிகாரி பதவியும் அவருக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இந்தப் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இதை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகக் கருத முடியாது.
சிங்கை ராமசந்திரனின் தவெக வருகைக்குப் பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பங்கு இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சிங்கை ராமசந்திரனும் எஸ்.பி. வேலுமணியும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிங்கையை தவெகவுக்குள் அனுப்பி அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை எஸ்.பி. வேலுமணி கணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல், விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியுடன் சிங்கை ராமசந்திரனுக்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மற்றும் திரைத்துறை தொடர்புகள் காரணமாக நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தவெக அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கனவே அதிமுகவின் ஐடி விங் மற்றும் சமூக வலைதளப் பிரிவில் பணியாற்றியவர் என்பதால், அந்தத் தொடர்பும் சிங்கை ராமசந்திரனுக்கு விஜய்யை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.
தற்போது 38 வயதாகும் சிங்கை ராமசந்திரனுக்கு, வரும் 2029 மக்களவைத் தேர்தலில் தவெக சார்பில் முக்கிய வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுகவில் இருந்தபோது டிஜிட்டல் அரசியலை நன்கு அறிந்த இளம் முகமாக இருந்த சிங்கை ராமசந்திரனை, தவெக தனது எதிர்கால அரசியல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கு பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தவெகவில் இணைந்தபோதும் அவர்களுக்கு உடனடி முக்கியத்துவம் கிடைக்காத நிலையில், சிங்கை ராமசந்திரனுக்கு விஜய்யின் நேரடி சந்திப்பு கிடைத்திருப்பது, “அரசியல் சீனியாரிட்டியை விட டெக்னாலஜி மற்றும் இளம் தலைமுறைக்கு விஜய் முக்கியத்துவம் கொடுக்கிறாரா?” என்ற புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
அடுத்ததாக சிங்கை ராமசந்திரனுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வப் பொறுப்புதான், தவெக தலைமை அவரை எந்த அளவுக்கு முக்கியத்துவத்துடன் பார்க்கிறது என்பதற்கான தெளிவான பதிலை அளிக்கும்.
English Summary
Vijay grants an immediate appointment only to Singai Ramachandran Was that former leader the reason for securing the appointment