சென்னையில் இன்று பிரம்மாண்ட 'வெற்றி தமிழ்நாடு' மாநாடு'...! - முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் பங்கேற்பு...!
grand Vetri Tamil Nadu conference being held Chennai today Investors participate under leadership Chief Minister Vijay
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் வேகம் சேர்க்கும் வகையில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், சென்னையில் இன்று ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கிறார்.தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் த.வெ.க. அரசு, தமிழகத்தின் தொழில் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.ஆட்சி பொறுப்பேற்று 96 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களை நேரடியாக சந்தித்து தமிழகத்தின் தொழில் வாய்ப்புகளை எடுத்துரைக்கும் வகையில், சென்னையில் இன்று ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக தமிழகத்திற்கு ரூ.67,452 கோடி அளவிலான புதிய தொழில் முதலீடுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு நடவடிக்கைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஆட்சியின் முதல் 100 நாட்களுக்குள் மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் வாயிலாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை வரவேற்றல், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாடு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்திற்கு தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
grand Vetri Tamil Nadu conference being held Chennai today Investors participate under leadership Chief Minister Vijay