சி.வி. சண்முகம் வீட்டில் 5 மணி நேர ஆலோசனை! வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தகட்ட நகர்வு என்ன? - Seithipunal
Seithipunal


அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய சுமார் 5 மணி நேர ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின் பின்னணி குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுகவில் தங்களுக்கு மீண்டும் பழைய பொறுப்புகளை வழங்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 நிர்வாகிகள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என அதிருப்தி நிலவி வருகிறது.

இதனால் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கட்சிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த நிலையிலும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மீது கட்சி ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்த் அறையில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் உடனிருந்ததாக தகவல் வெளியானது.

அந்த ஆலோசனையில், சட்டப்பேரவைக்குள் தங்களை ஒரு தனி அணியாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி. வேலுமணி தரப்பு முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இடைத்தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அரசியல் சூழ்நிலைகளால், உடனடியாக வேறு கட்சிக்குச் செல்லும் முடிவையும் இந்தத் தரப்பால் எடுக்க முடியாத நிலை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் சி.வி. சண்முகம் வீட்டில் நேற்று நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படும் இந்தக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழல், எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாடு, சட்டப்பேரவையில் தங்களது செயல்பாடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சட்டப்பேரவைக்குள் எடப்பாடி அணிக்கு போட்டியாக தனி அணியை உருவாக்கும் முயற்சி குறித்து எஸ்.பி. வேலுமணி ஆலோசித்து வருவதாக ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேச்சு உள்ளது.

மற்றொரு பக்கம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தியை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்திக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் போன்ற மூத்த தலைவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், அவர்கள் உடனடியாக தவெகவில் இணைவார்களா அல்லது அதிமுகவுக்குள்ளேயே தனி அணியை உருவாக்கி செயல்படுவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சி.வி. சண்முகம் வீட்டில் நடந்த 5 மணி நேர ஆலோசனைக்கு பிறகு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அரசியல் வியூகம் எந்த திசையில் செல்கிறது என்பதே தற்போது அதிமுக வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Five hour consultation at CV Shanmugam residence What is the next move for the disgruntled MLAs including Velumani and Natham Viswanathan


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->