“எனது மூன்று குழந்தைகளே பெரிய கிஃப்ட்!” – தூக்கமே இல்லை.. மனம் திறந்த யோகி பாபு
My three children are the greatest gift No sleep at all Yogi Babu opens up
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதையின் நாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஏராளமான படங்களில் நடித்து வரும் அவர், தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய யோகிபாபு, கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘யோகி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவரது பெயரே யோகிபாபு என நிலைத்தது. தொடர்ந்து ‘பட்டத்து யானை’, ‘சூதுகவ்வும்’, ‘வீரம்’, ‘மான் கராத்தே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து படிப்படியாக முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.
வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், உருவான இடைவெளியை யோகிபாபு திறம்பட பயன்படுத்திக் கொண்டார். வித்தியாசமான தோற்றம், உடல்மொழி மற்றும் தனக்கே உரித்தான காமெடி டைமிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கிய ‘மண்டேலா’ படத்திலும் கதையின் நாயகனாக நடித்த யோகிபாபு, அந்தப் படத்திற்காக பாராட்டுகளைப் பெற்றதுடன், படம் தேசிய விருதையும் வென்றது.
இருப்பினும், கதையின் நாயகனாக மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’, ‘மாவீரன்’, ‘குட் பேட் அக்லி’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘தலைவன் தலைவி’, ‘கட்டா குஸ்தி 2’ உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றன.
இந்த நிலையில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் யோகிபாபு கலந்து கொண்டார். அப்போது அவரிடம் படத்தின் நாயகன் இளன், “திருமணத்துக்கு பிறகு உங்கள் மனைவி கொடுத்த சூப்பர் கிஃப்ட் எது?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு யோகிபாபு, “மூன்று குழந்தைகளை கொடுத்திருக்கிறார்கள். அதுவே கிஃப்ட்தான்” என்று கலகலப்பாக பதிலளித்தார்.
உடனே இளன், “அடுத்து எப்போது சார்?” என்று கேட்க, யோகிபாபு சிரித்தபடி, “போதும் ப்பா... இதுக்கே என்னால் தூங்க முடியவில்லை. குழந்தைகளோடு போராட்டமாக இருக்கிறது” என்று கூறினார்.
யோகிபாபுவின் இந்த நகைச்சுவையான பதில் விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.
English Summary
My three children are the greatest gift No sleep at all Yogi Babu opens up