“பைபிளின்படி நடந்ததால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேச்சால் புதிய சர்ச்சை - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக ஆட்சி குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “பைபிளின்படி நடந்ததால்தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது” என்று அவர் பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ அறக்கட்டளையின் 4-வது ஆண்டு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்று பேசினார். அப்போது, தவெக அரசு தொடர்பாக தான் சபாநாயகராக பொறுப்பேற்ற பிறகு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அரசின் நடவடிக்கைகள் மற்றும் செய்திகள் குறித்து தொடர்ந்து பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஊழல் இல்லாத அரசு என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளதாகவும், அமைதியான தமிழகத்தை விரும்பும் முதல்வர் வந்திருப்பதாக மக்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கடவுள் நம்பிக்கை குறித்து பேசிய அவர், மனிதர்களின் அறிவு, திறமை, ஆற்றல் உள்ளிட்ட அனைத்தும் இறைவனிடமிருந்தே கிடைப்பதாக தெரிவித்தார். ஒருவர் தன்னிடம் மட்டுமே அறிவும் திறமையும் இருப்பதாக நினைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“எல்லாமே கடவுளிடம் இருந்துதான் வருகிறது. அவரை நம்புகிறவர்களுக்கு சகலமும் நன்மை கிடைக்கும்” என்ற பைபிள் கருத்தை மேற்கோள் காட்டிய சபாநாயகர், அதன் தொடர்ச்சியாகவே “பைபிளின்படி நடந்ததால்தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பேச்சு தற்போது அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சென்னை நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றிருந்தார். அப்போது, கரு உருவாகும் தருணத்திலிருந்தே உயிர் தொடங்குவதாகவும், குழந்தை கடவுள் அளித்த பரிசு என்றும் அவர் பேசியிருந்தார். அந்தப் பேச்சும் அப்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதமானது.

இதனுடன், சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பான விவாதத்தின்போது, “பிறப்பிலேயே கிறிஸ்தவன்” என்றும், தனது கிறிஸ்தவம் தனக்கு அன்பு மற்றும் அமைதியின் மொழியை கற்றுக்கொடுத்துள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் தவெக ஆட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களது மத நம்பிக்கைகளை தொடர்ந்து பொதுவெளியில் வெளிப்படுத்துவது, அரசின் மதச்சார்பின்மை தொடர்பான கேள்விகளை எழுப்பி வருகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், “பைபிளின்படி நடந்ததால்தான் ஆட்சி அமைந்தது” என்ற சபாநாயகரின் தற்போதைய பேச்சு, அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK formed the government because it followed the Bible Speaker JCD Prabhakar remarks spark a new controversy


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->