ரூ.5,000 ரொக்கப் பணமா...? பொங்கல் பரிசு குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று முடிவு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு என்பது கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கி வந்தது. ஆனால், 2025-ம் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு, ரொக்கப் பணம் வழங்கப்படாதது பொதுமக்களிடையே ஏமாற்றத்தையும், விமர்சனங்களையும் உருவாக்கியது.

இந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையில் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இதற்கிடையே, பொதுமக்கள் மத்தியில் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என்ற பல்வேறு ஊகங்களும் பேசப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த கூட்டத்தில்,பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் அதற்கான மொத்த செலவு கூடுதலாக வழங்கப்பட வேண்டிய ரொக்கப் பணத்தின் அளவு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

தகவலின்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,ஒரு முழு கரும்பு, ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது. மேலும், ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், 1 கோடியே 10 லட்சம் பேர் அரிசி அட்டைதாரர்கள் என்பதால், இவர்களுக்கே பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது.

ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5000 cash decision Pongal gift made Secretariat today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->