நொடிப் பொழுதில் பறிபோன 5 உயிர்கள்...! கோவையில் நசுங்கிய கார்... நெஞ்சை உலுக்கும் கோர விபத்து...!
5 lives lost instant Car crushed Coimbatore Heartbreaking accident
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் சாலையோரம் நடப்பட்டிருந்த செடிகளுக்கு, இன்று மதியம் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், உடுமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பலத்த வேகத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், காரில் பயணம் செய்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 5 பேரும் வாகனத்திற்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தின் தீவிரம் காரணமாக கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாக சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், கார் அதிவேகமாக சென்றதா, ஓட்டுநரின் கட்டுப்பாடு இழப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
5 lives lost instant Car crushed Coimbatore Heartbreaking accident