விருதுநகர் டாஸ்மாக் கொள்ளையர்கள் 5 பேர் கைது..!!
5 arrested in Virudhunagar Tasmac robbery
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் புளியங்குளத்தைச் சேர்ந்த செந்தில், பச்சேரியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாகவும், பள்ளிமடத்தை சேர்ந்த பூமிநாதன், பச்சேரியைச் சேர்ந்த முத்துக்கருப்பன், நார்த்தம்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி, பனையூரை சேர்ந்த பெருமாள்ராஜ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி டாஸ்மாக் கடையை நோட்டமிட்ட மர்ம கும்பல் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து கண்காணித்துள்ளது.

நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து, கணக்குகளை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அரிவால், வாள் போன்ற ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியது.
முகமூடி கும்பலைத் தடுக்க முயன்ற விற்பனையாளர் பூமிநாதனுக்கு வெட்டு விழுந்ததில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். மற்ற ஊழியர்கள் கடையை மூட முயன்றபோது மது பாட்டில்களால் அவர்களை முகமூடி கும்பல் தாக்கியுள்ளது. பின்னர், டாஸ்மாக் கடையிலிருந்த ரூ. 6.47 லட்சம், ஊழியரின் கையில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஏராளமான மது பாட்டில்களும் இந்த மேதலில் உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சுழி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருச்சுழி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
English Summary
5 arrested in Virudhunagar Tasmac robbery