நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அதிசயம் கண்டுபிடிப்பு...! அந்துப்பூச்சி உருவத்துடன் கிடைத்த பானை ஓடு...!
3000 year old miracle discovered Nellai pot shell moth image
நெல்லை அருகே நடைபெற்ற தொல்லியல் கள ஆய்வின்போது, சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் காணப்பட்ட கலைநுட்ப வேலைப்பாடுகள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் கைவினைத் திறனையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள், துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டனர்.
மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலை, உழக்குடி, நாட்டார்குளம், ஆதிச்சநல்லூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது.
மறுகால்தலையில் சுமார் 2,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், உழக்குடி அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல்லும், நாட்டார்குளத்தில் பழங்கால நடுகல்லும் இருப்பதை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குறிப்பாக உழக்குடி அருகே அமைந்துள்ள பழமையான நெடுங்கல்லை மாணவர்கள் பார்வையிட்டபோது, அதன் தொன்மையும் பிரம்மாண்டமான உயரமும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
நெடுங்கல்லுக்கு அருகே கள ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, மாணவர் லட்சுமணனுக்கு பானை ஓட்டின் ஒரு துண்டு கிடைத்தது. அந்த ஓட்டில் அந்துப்பூச்சியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.பழங்கால பானை ஓட்டில் உயிரினத்தின் உருவம் கலைநயத்துடன் இடம்பெற்றிருப்பது ஆய்வில் கவனத்தை ஈர்த்தது.
இதன் மூலம் அக்கால மக்களின் கைவினைத் திறன் மற்றும் இயற்கை சார்ந்த பார்வை குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.அதே பகுதியில் மாணவி பிரியா, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளைக் கொண்ட மண்பாண்டத்தின் பானைமூடியின் உடைந்த துண்டையும் கண்டெடுத்தார்.
இரண்டு தொல்பொருட்களும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்தார்.இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை மேலும் அறிந்துகொள்ள உதவும் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.
கள ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, பழங்காலத் தடயங்களைத் தேடி கண்டறிந்த தொல்லியல் துறை மாணவ-மாணவிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.
புத்தகங்களில் படிக்கும் வரலாற்றை நேரடியாக களத்திற்குச் சென்று ஆராய்வதன் மூலம் மாணவர்களுக்கு பழங்கால வாழ்வியல், பண்பாடு மற்றும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆழமான புரிதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மண்ணில் தொடர்ந்து வெளிப்படும் இதுபோன்ற தொல்லியல் தடயங்கள், தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
English Summary
3000 year old miracle discovered Nellai pot shell moth image