நகை, பணம் போனபிறகும் 10 புதிய வீடியோக்களை வெளியிட்ட நாகர்கோவில் யூடியூபர்!
118 Sovereigns Stolen from Nagercoil YouTuber House Post-Burglary Instagram Videos Cross 1 Crore Views
நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா, சமூக வலைதளங்களில் உடல் முழுவதும் அதிகளவில் தங்க நகைகளை அணிந்தும், கைநிறையப் பணக்கட்டுகளுடன் நடனமாடியும் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமான யூடியூபர் ஆவார். இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 118 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
600 சிசிடிவி கேமராக்கள் & தனிப்படை வேட்டை:
இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டப் போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவின்பேரில், கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தோட்டியோடு வழியாக நான்கு வழிச்சாலை நோக்கித் தப்பிச் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளன. அந்தத் தடயங்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோக்களும் பாலோயர்ஸ் உயர்வும்:
மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆடம்பர வீடியோக்களைப் பதிவிட்டு வந்ததே கொள்ளையர்களுக்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனிடையே, கொள்ளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே மதுமிதா தன் மீது பணத்தைக் கொட்டிக்கொண்டு நடனமாடுவது போன்ற 10 புதிய வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி, வெறும் 40 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 1.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. இச்சம்பவத்திற்குப் பிறகு அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கையும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
118 Sovereigns Stolen from Nagercoil YouTuber House Post-Burglary Instagram Videos Cross 1 Crore Views