இந்தியாவில் முதல்முறை.. 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய புதிய எல்.என்.ஜி ரயில்கள் அறிமுகம்..!
New LNG trains introduced in India for the first time
இயற்கை எரிவாயுவை இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பெறுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. இவ்வாறு சூழ்நிலைகளில் போக்குவரத்து துறைக்கு சவால் நிறைந்த காலங்களாவே இருந்தன. எனவே, இதற்கு மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும் என்று முடிவு எடுத்துள்ள மத்திய அரசு, அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நமது நாட்டிலேயே முதன்முறையாக, எல்.என்.ஜி மூலம் இயங்கும் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயில்வேக்கு ஏற்படும் செலவைக் குறைக்க, நாட்டின் முதல் எல்.என்.ஜி. ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த எல்.என்.ஜி ரயில், குஜராத்தின் சபர்மதியில் இருந்து மகேசனா சந்திப்பு வரை, 08 பெட்டிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரு எஞ்ஜின்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1,400 குதிரை திறன்கள் கொண்டவை.

அத்துடன், 2,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எல்.என்.ஜி சேமிப்புத் தொட்டியும், இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளமை விசேஷமானது. அதாவது, முழுமையாக எல்.என்.ஜி நிரப்பப்பட்டிருந்தால், ஒரு எஞ்ஜினை கொண்டு 444 கிலோ மீட்டர் வரை ரயிலை இயக்க முடியும்.
வழக்கமான டீசல் எஞ்ஜின் ரயில்களைப் போலவே, இதுவும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த எல்.என்.ஜி ரயிலால், டீசல் பயன்பாடு மற்றும் போக்குவரத்து செலவு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள டீசல் எஞ்ஜின் கொண்ட ரயில்கள், டீசல் மற்றும் எல்.என்.ஜி ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் மாற்றி வடிமைக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் அல்லது அன்றாட போக்குவரத்துக்கு டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் ஒரு நடைமுறை தீர்வாக, இந்த எல்.என்.ஜி தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
எதிர்காலத்தில், மின்மயமாக்கப்படாத ரயில் வழித்தடங்களில், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க, எல்.என்.ஜி மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள் கொண்ட ரயில்கள் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
New LNG trains introduced in India for the first time