T20 உலக கோப்பை போட்டியை புறக்கணித்துள்ள பங்களாதேஷ்; பி.சி.சி.ஐ. முடிவு; இலங்கை கிரிக்கிட் வாரியம் சொல்வது என்ன..?
What does the Sri Lanka Cricket Board have to say about the Bangladesh and BCCI issue in the T20 World Cup
2026 டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் அரசியல் முறுகல் நிலை மற்றும் பெரும்பாலோனோரின் எதிர்ப்பின் காரணமாக ஐபிஎல் போட்டியில் கல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியது.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணி, விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால், இறுதி நேரத்தில் போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற முடியாது என ஐ.சி.சி. மறுத்த நிலையில், தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்கவில்லை.
இருப்பினும், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை ஐ.சி.சி.நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாகப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்காட்லாந்தை சேர்த்துள்ளது.

வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் டி20 தொடரைப் புறக்கணிக்கலாம் அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடிவு செய்யலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐசிசி, பிசிசிஐ, பிசிபி ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அணி இதிலிருந்து பின்வாங்க வழியில்லை எனவும், அது ஏற்கெனவே இலங்கைக்குச் செல்ல தயாராகி விட்டதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில், டி20 தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி இதுநாள் வரை எதுவும் கருத்துக்கூறாமல் மௌனம் காத்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் பந்துல திசாநாயக்க முதன் முதலாக கருத்து கூறியுள்ளார்.
அதாவது, "இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான இந்தச் சச்சரவுகளில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம்; இவை அனைத்தும் நட்பு நாடுகள். இருப்பினும், இந்த நாடுகளில் எந்தவொரு நாட்டிற்கும் எதிர்காலப் போட்டிகளை நடத்த இலங்கை தயாராக இருக்கும்'' என ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
English Summary
What does the Sri Lanka Cricket Board have to say about the Bangladesh and BCCI issue in the T20 World Cup