பிப்ரவரி 01ந் தேதி நாடாளுமன்றத்தில் 09-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்; தயாரிப்புக் குழுவில் உள்ள முக்கியமானவர்கள் யார் தெரியுமா?
Do you know who the members of the Central Budget preparation team are
வரும் பிப்ரவரி 01ந் தேதி 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 2019 ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 09-ஆவது பட்ஜெட்இதுவாகும். இந்த மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தாலும் அதை உருவாக்கும் பின்னணியில் ஒரு குழு உள்ளது.
அதன்படி, மத்திய பட்ஜெட் தயாரிப்பு குழுவில் முக்கியமானவர் பொருளாதார விவகாரத் துறை செயலர் அனுராதா தாக்கூர். இவர் நிதி ஒதுக்கீடுகள் குறித்து முடிவு செய்வார். அத்தோடு, பட்ஜெட்டின் பேரியல் பொருளாதார கட்டமைப்பை வகுப்பதும் இவர்தான்.

அடுத்ததாக, வருவாய்த் துறை செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, இவர் பட்ஜெட்டில் வரி பிரிவுகளை கவனிப்பவர். அதாவது, நேரடி வரி மற்றும் மறைமுக வரி விதிப்புகள், சலுகைகள் அனைத்தையும் இவரது குழுதான் முடிவு செய்யும். இவருக்கு அடுத்ததாக செலவினத் துறை செயலர் வம்லுன்மங் வுயல்நாம். இவர் செலவினங்களை முடிவு செய்வது, மானியங்களை சூழலுக்கேற்ப சீரமைப்பது போன்றவை செய்பவர்.
அடுத்ததாக, நிதிச்சேவைகள் துறை செயலர் எம்.நாகராஜு. இவர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைகளைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ளார். இவர் பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய திட்டங்கள், ஏற்றுமதியாளர்கள் தொடர்பான விவகாரங்களை இவர் கவனித்துக்கொள்வார்.

இவரை தொடர்ந்து, முதலீடுகள் மற்றும் அரசு சொத்துகள் மேலாண்மைத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா. இவர் பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை உள்ளிட்ட வரி அல்லாத வருவாயை அதிகரிக்கும் பொறுப்பில் உள்ளார். அடுத்ததாக, பொது நிறுவனங்கள் துறை செயலர் மோசஸ் சலாயின். இவர் பொதுத் துறை நிறுவனங்களின் செலவின திட்டங்களை மதிப்பிட்டு தரும் பணிகளை செய்து வருகிறார்.
இந்த 06 துறைச் செயலர்கள் தவிர, தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனும் இக்குழுவில் முக்கிய பங்களிப்பை வழங்குபவர். அதாவது நாட்டின் பட்ஜெட்டிற்கான உள்ளீட்டுத் தகவல்களை வழங்குவது, சீர்திருத்த ஆலோசனைகள் வழங்குவது, எதுபோன்ற நிதிக்கொள்கைகள், யுக்திகளை கையாளலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை இவர் வழங்கி வருகிறார். இவர்கள் அனைவரும் தரும் உள்ளீடுகளை ஒருங்கிணைத்து நிதியமைச்சர் உருவாக்குவதே மத்திய பட்ஜெட்டாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
English Summary
Do you know who the members of the Central Budget preparation team are