தத்தளித்த இந்திய அணியை கரை சேர்த்த ரிஷப் பாண்ட்! வாஷிங்டன், ரோகித் அபார ஆட்டத்தினால் இந்தியா முன்னிலை!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஆனது அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை ஆடி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்க்ஸை ஆடி வரும் இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் 55 ரன்கள், லாரன்ஸ் 46 ரன்கள் கைகொடுக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2  விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள்.

முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கில் ரன் கணக்கை தொடங்காமலே ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் மேற்கொண்டு விக்கெட் விழாமல் ரோஹித், புஜாரா ஆட்டத்தினை முடித்தனர். ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்து இருந்தது. 

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு, தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எப்பொழுதும் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் மிகவும் மந்தமான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  எப்பொழுதுமே மந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும் சத்தீஸ்வர் புஜாராவும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆடுகளம் மெதுவாக இருப்பதால் நிலைத்து நின்று ஆட வேண்டிய கட்டாயத்தினால், அபப்டி ஆடுகிறார்கள் என்று நினைத்திருந்த வேளையில்,  புஜாரா கை கொடுப்பார் என்று எதிர்பார்த்த வேளையில், 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதற்கடுத்து வந்த கேப்டன் விராட் கோலி இந்த முறையும் ஏமாற்றம் அளித்து, ஸ்டோக்சின் அபாரமான ஒரு பந்துவீச்சிற்கு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாக ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த துணை கேப்டன் ரகானே மிகவும் மந்தமாக இருந்த இந்திய அணியின் ரன் ரேட்டை சிறிதளவு உயர்த்தும் அளவிற்கு சில பவுண்டரி அடித்தார். அவர் 27 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஸ்டவசமாக உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் ஆட்டம் இழந்தார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 

உணவு இடைவேளைக்கு பிறகு ரோகித் சர்மாவுடன், எப்போதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிஷப் பாண்ட் இணைந்தார். அவர் தவறான பந்துகளை மட்டும் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். மறுமுனையில் மிகவும் நிதானமாக விளையாடி கொண்டிருந்த ரோகித் சர்மா 49 ரன்களில் ஸ்டோக்ஸின் துல்லியமான இன்ஸ்விங் பந்து வீச்சிற்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்களில் இழந்தார்.

அதற்கடுத்தபடியாக வந்த அஸ்வின் சென்னையில் நடைபெற்ற 2வது போட்டியில் கை கொடுத்தது போலவே கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 13 ரன்களில் எளிமையான ஒரு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 146 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்திய அணி இங்கிலாந்து அணியின் ரன்களை கடக்குமா? முன்னிலை பெறுமா? என்ற பரிதாப நிலையில் இருந்தது.

அப்பொழுது களமிறங்கிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே தவறான பந்துகளை பவுண்டரிக்கு ஓட விட, மறு முனையில் நின்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் வானவேடிக்கை காட்டினார். குறிப்பாக அந்த அணியின் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ரிவர் ஸ்விப்பில் ஒரு பவுண்டரி அடித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கடந்த சில போட்டிகளில் அவர் 90 ரன்களை எட்டியதும் ஆட்டமிழந்த நிலையில், இந்த போட்டியில் அவ்வாறு நடந்திடுமோ என்ற அச்சம் கொண்டிருந்த வேளையில், 94 ரன்களில் இருந்தபோது சூப்பரான ஒரு சிக்ஸரை தூக்கியடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்திய மண்ணில் இது அவருக்கு முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக அவருடைய மூன்றாவது டெஸ்ட் சதம். அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சதமடித்த ரிஷப் பண்ட் ஆண்டர்சன் பந்துவீச்சில், அதிரடி ஷாட் ஆட முயற்சித்து கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் அதற்கடுத்து வந்த அக்சர் படேலும், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரும் பார்த்து கொண்டனர். அரைசதத்தை கடந்த வாஷிங்டன் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆனது 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தற்போது வரை 89 ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது. இங்கிலாந்து அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh pant century helps india get lead against england in 4th test


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal