'ஜனநாயகன்’ ரிலீஸில் அரசியல் அழுத்தம்...! தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு துணைநின்ற காங்கிரஸ் எம்.பி
Political pressure release Jananaayagan Congress MP who supported Vijay censorship issue
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’, நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் இதுவரை வழங்கப்படாததால், படத்தின் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாளை (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால், ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், ரிலீஸ் தள்ளிவைக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு திரையிடல் உரிமம் பெற்றுள்ள ஆர்.எப்.டி. பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன் மூலம், வெளிநாடுகளில் படம் நாளை வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
நாளையே சென்னை நீதிமன்ற தீர்ப்பு வெளியாக இருப்பதால், இந்தியாவிலும் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியலில் கால்பதித்துள்ள நிலையில், அவரது படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தணிக்கை நெருக்கடி அரசியல் ரீதியான அழுத்தத்தின் விளைவாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த பின்னணியில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில்,“சினிமாவுக்குள் அரசியலின் அனுமதி தேவையில்லை. தணிக்கைத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போலவே, தணிக்கை வாரியத்தையும் கட்டுப்பாட்டு கருவியாக மாற்றியுள்ளது. அதிகாரத்தின் முன் கலையை மண்டியிடச் செய்தால், ஜனநாயகம் நீடிக்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தின் 19(1) பிரிவு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதியாகக் காக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.திரையா? அரசியலா? – ‘ஜனநாயகன்’ ரிலீஸைச் சுற்றிய சர்ச்சை, நாளைய நீதிமன்ற தீர்ப்பை நோக்கி அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
English Summary
Political pressure release Jananaayagan Congress MP who supported Vijay censorship issue