நச்சுப்பொருள் சந்தேகம்: நெஸ்லே குழந்தை உணவுப் பவுடர் சந்தையிலிருந்து நீக்கம்...!
Suspected contamination Nestle baby food powder removed from market
பிறந்த குழந்தைகளுக்கான பால் உணவுகளில் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது நெஸ்லே. குறிப்பாக, 12 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் ஃபார்முலா பால், சத்தான மற்றும் பாதுகாப்பான உணவாக பெற்றோரால் பெரிதும் நம்பப்படுகிறது.
ஆனால் தற்போது, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில், நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பவுடர் ஃபார்முலா தயாரிப்புகளை சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெஸ்லே வெளியிட்டுள்ள விளக்கத்தில், பால் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், அந்த தயாரிப்புகளில் குமட்டல், வாந்தி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பால் பொருட்களில் நச்சுப்பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஃபார்முலா பால் தயாரிப்புகளை வாபஸ் பெறும் முடிவை நெஸ்லே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பால் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தை மீட்டுப் பெறலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை நெஸ்லே நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இந்த விவகாரம், பெற்றோர்களிடையே கவலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Suspected contamination Nestle baby food powder removed from market