ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
ENG vs AUS test match
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் இன்று (நவம்பர் 21, வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இது ஆஷஸ் தொடரில் இவ்விரு அணிகள் மோதும் 74-வது முறையாகும்.
வரலாற்றுப் பதிவுகளின்படி, ஆஸ்திரேலியா 40 முறையும், இங்கிலாந்து 33 முறையும் ஆஷஸ் தொடரை வென்றுள்ளன. ஆஸ்திரேலியா 2023 தொடரிலும் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
இரு அணி பலம்
ஆஸ்திரேலியா: பிரதான பௌலர் ஜாஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியது பின்னடைவாக இருந்தாலும், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இங்கிலாந்து பேட்டர்களுக்குச் சவால் அளிப்பார்கள். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா, மார்கஸ் லபுஷேன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர் பிரெண்டன் டாக்கெட் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து: இங்கிலாந்து அணி தங்கள் பலமான ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களை முக்கியமாகக் களமிறக்குகிறது. பேட்டிங்கில் ஜாக் கிராலி, ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியின் நம்பிக்கையாக இருக்கின்றனர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "வெற்றிகரமாக நாடு திரும்பிய கேப்டன்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன். எங்களுக்கான வரலாற்றை உருவாக்க வேண்டிய தருணமிது" என்று கூறியுள்ளார். இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.