அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்.!
Today special venkatesa perumal kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொண்டிபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவில் உள்ள மொண்டிபாளையம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு பெருமாள் சாளகிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் பெருமாள் ஏகதள விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது.
இத்தலம் 'மேலத்திருப்பதி" என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே, இங்கு செல்ல வேண்டுமெனில் இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்தே செல்ல வேண்டும்.
வேறென்ன சிறப்பு?
வடகிழக்கே சனீஸ்வர பகவான் தனது காக வாகனத்தில் தனியே அமர்ந்தும், வலது முகப்பில் கிழக்கு நோக்கியபடி சக்கரத்தாழ்வார் நின்ற கோலத்தில் சக்கரவடிவிலும், வீர ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடியும் காட்சி தருகின்றனர்.
சுற்றுப் பிரகாரத்தில் வேணுகோபால், ஆழ்வார்கள், மகாலட்சுமி, ஆண்டாள், வைகுண்ட நாராயணமூர்த்தி ஆகியோர் அமைந்துள்ளனர்.
சுவாமிக்கு இடது புறத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது. இங்கு சுவாமியை வணங்க வருபவர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தை மாதத்தில் 10 நாள், மார்கழியில் 11 நாள் பிரம்மோற்சவம் பிரதான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
வெங்கடேசரை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குடும்பம் மற்றும் தொழில் விருத்தியடையும், பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும். மல்லிப்பொட்டினை நெற்றியில் இட்டுக்கொள்ள நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமிக்கு தளிகை நைவேத்தியம் படைத்து அஷ்டோத்ர அர்ச்சனைகள் செய்து விசேஷ திருமஞ்சனம், சுதர்சன ஹோமம், திருக்கல்யாணம் நடத்தி வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special venkatesa perumal kovil