இந்தோனேசியாவுக்கு 19% வரி விதிப்பை குறைத்த டிரம்ப்...! காரணம் என்ன?
Trump reduced the 19percentage tax rate for Indonesia What reason
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து வருகிறார்.இதில் வரி விதிப்பை தடுக்க பல நாடுகள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி,வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது டிரம்ப் சமீபத்தில் வரி விதிப்பை அறிவித்து வருகிறார்.இந்நிலையில் அமெரிக்கா - இந்தோனேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் தெரிவித்ததாவது,"நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இது குறித்து அந்த நாட்டின் அதிபருடன் நான் பேசினேன். இதற்கு முன்பு இந்தோனேசியா சந்தையை நம்மால் அணுக முடியாத சூழல் இருந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது.அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது.
அதேவேளையில் இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரி விதிக்கும். இந்தோனேசியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க - இந்தோனேசிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆசிய நாட்டின் சந்தைகளுக்கு முழு அணுகலைப் பெறும்.இதே வழியில் இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
நாங்கள் இந்தியாவை அணுகப் போகிறோம். இந்த நாடுகளில் எதற்கும் எங்களுக்கு அணுகல் இல்லை. எங்கள் மக்களால் உள்ளே சென்று வர்த்தகம் செய்ய முடியவில்லை. தற்போது நாங்கள் வரிகளுடன் என்ன செய்கிறோம் என்பதன் காரணமாக அங்கு அணுகலைப் பெற உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பல வாரங்களாக அமெரிக்காவில் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump reduced the 19percentage tax rate for Indonesia What reason