பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சேவை... குட் நியூஸ் அறிவித்த மெட்ரோ!
Poonthamalli Porur Metro service The metro announced good news
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்றுவருகிறது . இதில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமையவுள்ளது.
இதில் பூந்தமல்லி-போரூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இந்தப் பாதையில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பயணிகள் ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . குறிப்பாக, இந்தப் பாதையில், இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள், அதிவேகமாக ரெயிலை இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்தனர்.
அத்துடன், வழித்தடத்தில் ரெயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனைகள், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிகள் ரெயில் இயக்குவதற்கு முன்பாக பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். அதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இந்தப் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய உள்ளார்.
அமைக்கப்பட்ட பாதை சரியாக இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பு கமிஷனர் பயணிகள் போக்குவரத்தை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்குவார். அப்படி வழங்கும் பட்சத்தில் பூந்தமல்லி-போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அவை ஓரிரு மாதங்களில் சரிசெய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary
Poonthamalli Porur Metro service The metro announced good news