தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபடலாம் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
VCK Thirumavalavan say about Vote election BJP 2026
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபடக்கூடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு மாநிலங்களில் வாக்குத் திருட்டு நடைபெறுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.
பிகாரில் வாக்கு மோசடிக்கு எதிராக ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பயணம் வெற்றியடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விசிக இந்த பயணத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அத்தகைய வாக்கு மோசடி முயற்சிகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக திருமாவளவன் எச்சரித்தார். பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது, அண்டை மாநிலங்களில் வசிக்கும் மக்களை தமிழ்நாட்டின் பட்டியலில் சேர்ப்பது போன்ற அநீதி பாஜக அரசு செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையமே பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்பதால் ஜனநாயகத்துக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், நாடாளுமன்றத்தில் பிகாரின் சிறப்பு வாக்காளர் விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்பதையும், 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சமாகும் என்றும் அவர் விமர்சித்தார்.
English Summary
VCK Thirumavalavan say about Vote election BJP 2026