ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) கட்டாயம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
TET Exam Must SC order
ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் இந்தத் தேர்வு அவசியம் என நீதிபதிகள் திபான்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
உத்தரவின் படி, ஓய்வுபெற இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதாமல் பணியை தொடரலாம். ஆனால் அதற்கு மேல் பணியாற்ற விரும்புவோர் கட்டாயம் டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். தேர்ச்சி பெற முடியாவிட்டால் வேலையை விட்டு விலக வேண்டும் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வூதியம் பெறலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயப்படுத்துவது சாத்தியமா, அப்படி செய்தால் அவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கு, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் விசாரணை நடைபெற்றபோது உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பாகும். தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுதோறும் தனித்தனியாக டெட் தேர்வை நடத்துகின்றன. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே ஆசிரியர் பணியில் சேரும் தகுதி வழங்கப்படும் என்ற நடைமுறை உள்ளது.
இந்த தீர்ப்பால், ஆசிரியர்கள் தகுதித் தேர்வை தவிர்க்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் டெட் தேர்வை கடைபிடிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த உத்தரவு வலியுறுத்துகிறது.