பயங்கரவாத எதிர்ப்பில் எந்த சமரசமும் இல்லை- பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு வெளிப்படையான எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2 நாள் உச்சி மாநாடு தொடங்கியது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப், ஈரான் அதிபர் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூடுதலாக 2 பார்வையாளர் நாடுகளும், 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் இரண்டாவது நாள், தலைவர்களை வரவேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் அன்பாக உரையாடினார். மூவரும் சிரித்தபடி பேசிய காட்சி சர்வதேச ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அனைத்து தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்து, பொதுக்கூட்ட அமர்வில் கலந்துகொண்டனர்.

உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை வேரறுக்கும் போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இந்தியாவின் பங்களிப்பு பாதுகாப்பு, பரஸ்பர இணைப்பு, வாய்ப்பு என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது.”“இந்தியா பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதத்தின் அருவருப்பான முகத்தை காட்டியது.”

“சில நாடுகள் வெளிப்படையாகவே பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றன. இது ஏற்க முடியாதது. பயங்கரவாதத்திற்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இருக்கக்கூடாது.”

“பயங்கரவாத நிதியுதவியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அல்கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை எதிர்க்க இந்தியா முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.”

“பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த சமரசமும் இல்லை; இரட்டை நிலைப்பாடும் இல்லை என்று நாம் உலகுக்கு தெளிவாகக் கூற வேண்டும்.”

மோடி, எந்த நாட்டின் பெயரையும் நேரடியாக குறிப்பிடாத போதிலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை கடுமையாக விமர்சித்தது பாகிஸ்தானை குறிவைத்ததாக சர்வதேச பார்வையாளர்கள் கருதினர். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் முன்னிலையில் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருப்பது சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் மோடி, சபாஹர் துறைமுகம் மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற திட்டங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைப்பை வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார். வலுவான இணைப்பு வர்த்தகத்தையும், வளர்ச்சியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று வலியுறுத்தினார்.

SCO நாடுகளுக்குள் நெருங்கிய உறவை வளர்க்க, நாகரிக உரையாடல் மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற புதிய முன்மொழிவையும் மோடி வைத்தார். இது பண்டைய நாகரிகம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் இலக்கியங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் என அவர் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No compromise in counter terrorism PM Modi open warning to terrorism


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->