மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் குழந்தை உட்பட மேலும் இருவர் பலி!
Kerala more deaths from brain eating amoeba
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அரிய வகை தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
Naegleria fowleri என்ற இந்த அமீபா, primary amoebic meningoencephalitis எனப்படும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில் கேரளாவில் இந்த தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4ஆம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிலை மோசமடைந்து அந்தக் குழந்தை இன்று உயிரிழந்தது. அதேபோல் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயது ராம்லா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இதே நோயால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு முன் தமரசேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்திருந்தார். இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
மருத்துவர்கள் விளக்குவதாவது, சுத்தமில்லாத ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீச்சல் குளங்களில் குளிக்கும் போது இந்த அமீபா மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைகிறது. அங்கிருந்து நரம்புகளைத் தொடர்ந்து மூளைக்குள் சென்று, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கடைப்பு, கழுத்து இறுக்கம், குழப்ப நிலை, வலிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. அசுத்தமான நீரை குடித்தாலோ, உணவின் மூலம் உடலுக்குள் சென்றாலோ பாதிப்பு ஏற்படாது. மூக்கின் வழியாக மட்டுமே நுழையும் இந்த அமீபா, உப்புநீரில் உயிர்வாழாது. எனவே குளியல் மற்றும் நீர்விளையாட்டு செய்யும்போது சுத்தம் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
English Summary
Kerala more deaths from brain eating amoeba