கெளதம் சார் தான் எனக்கு.. அந்த ஷாட்டை கத்துக்கொடுத்து கொடுத்தாரு.. ரிங்கு பேட்டி!
Gautham sir taught me that shot Ringu interview
செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு பல சர்ச்சைகளை எழுப்பியது. சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு காரணமாகியது.
முன்னாள் வீரர்கள் பலரும், “ரிங்கு சிங், சிவம் துபே போன்றோர் இடத்தை பிடிக்க ஸ்ரேயாஸை விடுத்துவிட்டார்களே?” என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், “அவரை யாருக்கு பதிலாக சேர்ப்பது?” என பதில் கூறினார். இதனால் விவாதம் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற யூபி டி20 தொடரில் ரிங்கு சிங் அசத்தலான சதமடித்து தன் ஃபார்மை நிரூபித்துள்ளார். இதன் மூலம், தனது ஆசியக் கோப்பை இடத்தை நியாயப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், ரிங்கு சிங் தனது வளர்ச்சிக்கு பெரிய காரணமாக இருந்தவர் கௌதம் கம்பீர் என தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“கௌதம் கம்பீர் சார் எப்போதும் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வந்துள்ளார். முதன்முதலில் அவரை கொல்கத்தா அணியில் சந்தித்தபோதே, எனக்குள் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நீண்ட நேரம் பயிற்சி செய்திருக்கிறேன். குறிப்பாக, ஃபுல் ஷாட் அடிப்பது எப்படி என்பதை அவர் விரிவாக கற்றுக் கொடுத்தார்.
அவர் தனது வீரர்களிடம் வந்து நேரடியாக பேசி ஊக்கம் அளிப்பார். அவரின் அணுகுமுறை எப்போதும் ஒரு சிறப்பு உணர்வைத் தரும். பேட்டிங், பவுலிங் அல்லது உடற்பயிற்சி என எந்த விஷயமாக இருந்தாலும், அவருடன் விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசியக் கோப்பைக்காக துபாய் சென்றதும் அவரை மீண்டும் சந்திக்கப் போகிறேன். அவரது பயிற்சியில் மீண்டும் விளையாடும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். என் வாழ்க்கை பயணத்தில் அவர் அளித்த ஆதரவு மிகப் பெரிது” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், விமர்சனங்களுக்கு மத்தியில் தனது இடத்தைச் சீராக பிடித்திருப்பதோடு, கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலே தன்னுடைய வெற்றியின் அடித்தளம் என ரிங்கு சிங் வெளிப்படையாக கூறியுள்ளார்.
English Summary
Gautham sir taught me that shot Ringu interview