தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? துரோகத்திற்கான பெருந்தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Sanitary workers issue
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், பணி ஒப்பந்தத்தில் ரூ.16,950 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தூய்மைப் பணியாளர்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி அவர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகராட்சியின் இராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணியை சென்னை என்விரோ சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2300 கோடிக்கு தமிழக அரசு வழங்கியது. அதனால் அந்த இரு மண்டலங்களில் பணியாற்றி வந்த நிரந்தரப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனம் வழங்கும் ஊதியத்தை வாங்கிக் கொண்டு பணியில் சேரும்படி கட்டாயப்படுத்தப்படனர். அவர்கள் ஏற்கனவே மாதம் ரூ.22,590 ஊதியம் வாங்கி வந்த நிலையில் தனியார் நிறுவனம் ரூ.16,950 மட்டுமே ஊதியம் வழங்க முன்வந்தது.
அதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆணையிட்டது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தூய்மைப் பணியாளர்களை அழைத்த சென்னை மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்களும், மாநகராட்சி உறுப்பினர்களும், ‘’ இன்றைக்கே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்; வேலைநிறுத்தம் செய்த நாள்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்; இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டும் தான்” என்று கூறியதால் அதை நம்பி நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால், வீடு திரும்பி ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்த போது தான் அதில் மாத ஊதியம் ரூ.16,950 மட்டும் தான் என்றும், நிறுவனம் நினைத்தால் ஒரு மாத ஊதியத்தை வழங்கி எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாததைப் பயன்படுத்தி இந்த மோசடியை தனியார் நிறுவனம் செய்திருக்கிறது. அதற்கு திராவிட மாடல் அரசு துணை போயிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மோசடி செய்வது பெரும் குற்றம். இதை மன்னிக்க முடியாது.
தூய்மைப் பணியாளர்கள் தான் திமுக அரசை வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்கள். அவர்களுக்குத் தான் திமுக அரசு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டு, எங்கிருந்தோ வந்த தனியார் துப்புரவு நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டலுக்குத் துணை போயிருக்கிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களான தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வரும் தேர்தலில் இந்த துரோகத்திற்கான தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Sanitary workers issue