ஐந்து தலை நாகம் குடைபிடித்த முருகன்.. ஒருவரில் மூவர்.. குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.!
Today special kumarakottam Murugan temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
காஞ்சிபுரம் ராஜ வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடைபிடிக்கிறது.
இத்தல மூலவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் என அழைக்கிறார்கள். முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.
வைகாசி 11ஆம் நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடனும், ஐப்பசி கந்தசஷ்டியில் தேவசேனாவுடனும் முருகனுக்கு திருமணம் நடக்கிறது.
இத்தலத்தில் நவ வீரர்கள் மற்றும் நாகசுப்பிரமணியர் ஆகியோர் அழகாக காட்சியளிக்கின்றனர். நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

வேறென்ன சிறப்பு?
மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை 'ஒருவரில் மூவர்" என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.
புராணங்களுள் மிகவும் புகழுடையது கந்த புராணம். இந்த புராணம் குமரக்கோட்டத்தில் எழுந்ததே. இத்தல முருகனே 'திகட சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து தனக்கு பூஜை செய்யும் கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு 'கந்தபுராணம்" எழுதுமாறு செய்தான் என்பது ஐதீகம். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.
குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது.
காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கந்தசஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆகியவை இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது தவிர செவ்வாய், வெள்ளி, சஷ்டி முதலிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special kumarakottam Murugan temple