கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைப்புக்கு தடை – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
Ban on Green Park establishment at Kindi Racecourse Ground Green Tribunal order
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேளச்சேரி ஏரி மற்றும் அதனைச் சூழ்ந்த கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தீர்ப்பாயம் தாமாகவே (suo motu) எடுத்த வழக்கை விசாரித்து வருகிறது. இதே வழக்கில், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத்தலைவர் குமாரதாசன் தாக்கல் செய்த மனுவும் இணைக்கப்பட்டுள்ளது.
முந்தைய விசாரணையின் போது, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள 118 ஏக்கர் நிலத்தை ஏரி ஆக மாற்றலாம் என்றும், இது மழைக்கால வெள்ள அபாயங்களை குறைக்க உதவும் என்றும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது. ஆனால், அந்த நிலம் தற்போது தோட்டக்கலைத் துறைக்கு பசுமை பூங்கா அமைப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கடந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. எனினும், இன்றைய (ஜூலை 15) விசாரணையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் ரேஸ்கோர்ஸ் மைதான நிலம் சென்னை மாநகராட்சிக்கு முறையாக மாற்றம் செய்யப்பட்டதா என்பது தெளிவல்ல என கூறுகிறது.வருவாய்த்துறை அல்லது தோட்டக்கலைத்துறை மூலம் உரிமை மாற்றம் நடந்ததில்லை என மாநகராட்சி தரப்பில் வக்கீல் வாதிட்டார்.
எனவே, அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பசுமை பூங்கா தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும் என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
English Summary
Ban on Green Park establishment at Kindi Racecourse Ground Green Tribunal order