தமிழ் மொழியில் கும்பாபிஷேக வேதங்கள் ஓதிய அர்ச்சகர்கள்...! மெய்சிலிர்த்த பக்தர்கள்...! - Seithipunal
Seithipunal


கடந்த 7-ந்தேதி, முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடாக கருதப்படும்  திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விசேஷமானது கோலாகலமாக நடந்தது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 ஆய்வு கூட்டங்கள் நடந்ததுடன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், அறங்காவலர் குழுவும் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே ஏற்பாடுகளை தொடங்கினர். இந்த கும்பாபிஷேகத்தோடு ரூ.400 கோடி மதிப்பிலான திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கும்பாபிஷேகத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர்.அதுமட்டுமின்றி, ஜப்பான் உள்பட வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அதிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டில் இருந்துவந்த பக்தர்கள் பச்சை வேட்டி அணிந்திருந்தனர். அதில் ஆண்களும், பெண்களும் கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் விண்ணதிர கோஷமிட்டது தமிழர்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும், 76 குண்டங்களுடன் வேள்விச்சாலை அமைக்கப்பட்டு 12 பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார்களைக்கொண்டு அன்னைத் தமிழிலும், பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முற்றோதல் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தன்று காலை மட்டும் ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் குழுமியிருந்தாலும் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு என்று எந்த வசதிக்கும் ஒரு குறையும் ஏற்படவில்லை.

கோவில் சார்பில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு, ஒரு லட்சம் உணவு பொட்டலங்களும் மற்றும் தன்னார்வலர்களைக்கொண்டு 3 லட்சம் உணவு பொட்டலங்களும் மக்களுக்கு கொடுக்கப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் மீது 20 டிரோன்கள், நீர் தெளிப்பான்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டன. ஒரு லட்சம் பிரசாத பைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வளவு திரளான கூட்டம் இருந்தாலும் எங்கும் நெரிசலோ, எந்தவித குழப்பமோ இல்லாமல் கூட்ட மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது.

அதுமட்டுமின்றி, கூடுதல் காவல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, நெல்லை காவல் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி, தூத்துக்குடி காவல் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் துணை காவல் சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட 9 மாவட்ட காவல் சூப்பிரண்டுகள் அடங்கிய 6,100 காவல் மிக திறமையாக இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 27000 மக்கள்தொகையை கொண்ட திருச்செந்தூரில் ஒரே நேரத்தில் 8 லட்சம் பேர் குவிந்தாலும் நெரிசலில் சிக்காமல் பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்தவுடன், தங்கள் ஊருக்கு எந்தவித சிரமமும் இன்றி திரும்பி செல்லமுடிந்தது.

கூட்டம் அலை அலையாக வந்தாலும் வட மாநிலங்களைப்போல எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மிக திறமையாக கும்பாபிஷேகத்தை நடத்த முடிந்தது. இதற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறையின் திட்டமிடுதலும், காவல் துறையின் அயராத பணியும்தான் காரணம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியிருந்தாலும் அசம்பாவிதம் இல்லாத கும்பாபிஷேகம் தான் இதன் பெருமை. எதிர்காலத்தில் மக்கள் அதிகம் கூடும் பல பெரிய கோவில்களின் விழாக்களை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு திருச்செந்தூர் கும்பாபிஷேகம் வழிகாட்டியாக அமைந்துவிட்டது. மொத்தத்தில் அறநிலையத்துறை வரலாற்றில் திருச்செந்தூர் கும்பாபிஷேகம் ஒரு மைல் கல் என்றால் அது மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priests who recited Kumbabhishek Vedas in Tamil Devotees who were enchanted


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->