பங்குனி உத்திரத்தில் விரதம் இருப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பனிரெண்டாவது மாதமான பங்குனியும், பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரமாகும்.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தை செய்யும்போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த நன்னாளில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வங்களின் திருமணங்கள் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்கு சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய நாளாக பங்குனி உத்திர நாள் விளங்குகிறது.

விரதம் இருப்பது எப்படி? 

பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். நாளை பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் இன்று இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். 

மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும். 

பிறகு ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும்.

அன்று முழுவதும் சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. 

பலன்கள் :

பங்குனி உத்திர நாளில் நம்மால் முடிந்த உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால் திருமணம் கூடிவரும். 

கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையையும் பெற முடியும்.

உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pankuni uththiraththin viratham


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->