நம்பியவருக்கு காவலன்.. எதிர்ப்பவர்களுக்கு எமன்.. காவல் தெய்வம் கருப்பசாமி..!!
god karuppu sami
நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கருப்பசாமி. பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார்.
தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் கருப்பசாமி காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பார்கள்.
உருவம்:
கருப்பசாமி நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என பல்வேறு நிலைகளில் பல கோவில்களில் காட்சியளிக்கிறார்.
தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில், இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.
வரலாறு:
வால்மீகி, தர்ப்பையை கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி" எனும் ஸ்ரீகருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்கு சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும், சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.
கருப்பசாமி பூஜை:
காக்கும் தெய்வம் கருப்பசாமி பூஜைக்கு சுத்தமான நபர்களையே அனுமதிக்க வேண்டும். பூஜையில் அமர்ந்தவுடன் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு சங்கல்பம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், பெயர் மற்றும் கோத்திரம் ஆகியவற்றை சொல்லி வணங்குவதுடன், எந்த காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதை சிந்தித்து பூஜையை தொடங்க வேண்டும்.
முன்னதாக சத்குருவை நமஸ்கரிப்பது அவசியம். கருப்பசாமியை புஷ்பங்களால் அர்ச்சிக்கலாம். 'ஓம் நமோ பகவதே ஸ்ரீமுக கருப்பசாமியே நமஹ" என கூறி வழிபடலாம்.
கருப்பசாமி சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். பரம்பொருளாக விளங்கும் சிவபெருமான் அம்சமாக விளங்கும் கருப்பசாமிக்கு சம்ஹார ஆகாரங்கள் வைத்து பூஜிக்கவே கூடாது என்பது நியதி.
கருப்பசாமிக்கு உகந்த படையல் பொருட்களாக சர்க்கரை பொங்கல், அவல், பொரிக்கடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.
கருப்பசாமியின் பெயர்கள்:
கருப்பசாமி அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டை கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர்.
வழிபாடு:
கருப்பசாமி தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர்.
கருப்பசாமி தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றுகிறார்.
நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குகிறார்.
தர்மத்தின் நியாயத்தை கருப்பசாமியிடம் நிச்சயமாக பெறலாம்.