இன்று... தேய்பிறை அஷ்டமி... பைரவருக்கு உரிய அபிஷேக பொருட்கள்... என்னென்ன?
bairavar vazhipadu 2
எல்லா நாட்களும் இறைவழிபாடுகள் செய்ய வேண்டும் என்றாலும் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டிய நாட்கள் என சிலவற்றை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குறிப்பாக, தேய்பிறையில் வரும் சதுர்த்தி, அஷ்டமி, ஏகாதசி, பிரதோஷம் ஆகியன கட்டாயம் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டிய நாட்கள்.
அந்தவகையில் தேய்பிறை அஷ்டமி சிவவழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் சிவ பெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். சிவபெருமான் ருத்ர ரூபம் கொண்டு கால பைரவராக அவதரித்தது கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமி தினத்தில். எனவே, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் கால பைரவரை வழிபடுவது சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு :
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவகிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.
இன்றைய தினம் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்குகின்றனர்.
தடை நீக்கும் பைரவர் :
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.
அபிஷேக பிரியர் பைரவர் :
அபிஷேக பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வெண் பூசணிக்காய் வெட்டி பலியிட வேண்டும்.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்ற வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கலை நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். எளிமையாக எலுமிச்சை சாதம் படைத்தும் பைரவரை வணங்கலாம்.