வீஷப்பூச்சி கடித்துவிட்டதா...? உடனே நீங்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தெரிந்துகொள்ளுங்கள்...!
Bitten by bedbug Find out what you can and cant do right away
இன்றைய சூழலில் விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் கிராமப்புறங்களில் செடிகள், புதர்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களிலேயே காணப்பட்ட தேனீ, குளவி போன்ற பூச்சிகள், இப்போது நகர்ப்புறங்களுக்குள்ளும் சுலபமாக புகுந்து வருகின்றன. வீட்டு தோட்டம், மாடிப்பக்கம், தெரு மரங்கள், குப்பை கிடங்குகள் போன்ற இடங்களிலும் இவை அதிகமாகத் தோன்றுவதால், மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென விஷப்பூச்சி கொட்டினால் பயம் அல்லது பதற்றம் காட்டுவது நிலையை மேலும் மோசமாக்கும். அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது உயிரைக் காப்பாற்றும் முதலடி.
செய்யக்கூடாதவை
விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கீறுதல் அல்லது நகத்தால் குத்துதல் தவறு. விஷத்தை வாயால் உறிஞ்ச முயல்வதும் ஆபத்தானது. அதிக அழுத்தம் கொடுத்து அழுத்துதல், தேவையில்லாத மருந்துகள் அல்லது எண்ணெய்கள் தடவுதல், மிகவும் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்கள் விஷம் வேகமாக பரவ காரணமாகலாம்.இந்த தவறான முறைகள் நிலையை சிக்கலாக்கும் என்பதால் அவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அபாயத்தை உணர்த்தும் அறிகுறிகள்
சில நேரங்களில் விஷப்பூச்சி கொட்டுதல் சாதாரண வீக்கத்துடன் முடிவதில்லை. உடல் கடுமையான அலர்ஜி எதிர்வினை காட்டலாம்.
மூச்சுத்திணறல்
முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்
தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு
இதயத் துடிப்பு அதிகரித்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் அல்லது அரிப்பு
கடும் அலர்ஜி தாக்கம்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனடி மருத்துவ உதவி அவசியம்.
விஷப்பூச்சி கொட்டினால் செய்ய வேண்டியது
தேனீ அல்லது குளவி கொட்டியதும் முதலில் அமைதியாக இருக்க வேண்டும்.
கொட்டிய இடத்தில் தேனீயின் கொடுக்கை இருந்தால் அதை மெதுவாக அகற்ற வேண்டும். ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் போன்ற தட்டையான பொருளை பயன்படுத்தி ஓரமாக தேய்த்து வெளியேற்றலாம்.கையை வைத்து அழுத்துதல் அல்லது விரலால் பிடுங்குதல் தவிர்க்கப்பட வேண்டும். அது விஷத்தை மேலும் உடலுக்குள் தள்ளக்கூடும்.
பின்னர் சலவை சோப்பு அல்லது சுத்தமான நீர் கொண்டு அந்த இடத்தை நன்றாக கழுவ வேண்டும். வீக்கம் மற்றும் வலியை குறைக்க 10–15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.அதன்பின் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம்.
English Summary
Bitten by bedbug Find out what you can and cant do right away