“பிரபலத்தை மட்டும் நம்பி ஆட்சி நடத்த முடியாது” – விஜய் அரசுக்கு கொரிய பொருளாதார நிபுணர் ஆலோசனை!
You canot rule by relying on popularity alone Korean economist advises Vijay government
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கொரியாவின் சர்வதேச பொருளாதார கொள்கை நிறுவனமான KIEP-இன் இந்தியா மற்றும் தெற்காசியா பிரிவு தலைவர் க்யுங்ஹூன் கிம் முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தமிழக அரசியல் குறித்து தனக்கு ஆழமான அறிவில்லை என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசுகள் எதிர்கொள்ளும் நிர்வாக சவால்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
க்யுங்ஹூன் கிம் கூறுகையில், புதிய அரசுகள் பொதுவாக தங்களது தனித்துவத்தை நிரூபிக்கும் வகையில் பெரிய திட்டங்களை அறிவிக்க விரும்பும். ஆனால் அத்தகைய திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகுந்த கவனம் தேவைப்படுவதாக எச்சரித்தார்.
“நீண்டகால அனுபவம் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு நிர்வாக அமைப்பு, அதிகார அமைப்பு மற்றும் செயல்முறை குறித்த அனுபவம் இருக்கும். தவெக போன்ற புதிய கட்சிக்கு அந்த நிர்வாக அனுபவமும், வலுவான அமைப்பு ரீதியான நெட்வொர்க்கும் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “தற்போது தவெகவின் மிகப்பெரிய பலம் விஜய்யின் பிரபலமும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கும்தான். ஆனால் பிரபலத்தை மட்டும் நம்பி அரசு செயல்பட்டால், ஆரம்பகட்டத்தில் நிகழும் சிறிய தவறுகள்கூட பெரிய அரசியல் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்றும் எச்சரித்தார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிலை மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளதால், அரசியல் நிலைத்தன்மையை பாதுகாப்பது புதிய அரசுக்கு மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். “மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் ஏற்படும் நிர்வாக குழப்பங்கள் மக்கள் நம்பிக்கையை விரைவாக பாதிக்கக்கூடும்” என்றார்.
தமிழ்நாட்டின் உண்மையான பலம் அதன் பொருளாதாரமும் தொழில்துறை அடித்தளமும் தான் என்று க்யுங்ஹூன் கிம் வலியுறுத்தினார். இந்தியாவின் முன்னணி பொருளாதார மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல தொழில், உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“புதிய அரசு அவற்றை தொடர்ச்சியாக செயல்படுத்தி, முதலீடுகளை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், அந்த வளர்ச்சியை தனது நிர்வாக வெற்றியாக மக்கள் முன் காட்ட முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “முதல் சில ஆண்டுகளில் நிகழும் பொருளாதார வளர்ச்சி முழுமையாக புதிய அரசின் கொள்கைகளால் மட்டும் வராது; முந்தைய அரசுகள் உருவாக்கிய அமைப்புகளின் தொடர்ச்சியாகவும் இருக்கும். இது உலகம் முழுவதும் எல்லா புதிய அரசுகளுக்கும் பொருந்தும்” என்றார்.
தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகக் கூறிய அவர், அந்த வளர்ச்சியை தொடர்ச்சியாக பராமரிப்பது புதிய அரசுக்கு மிகப்பெரிய அரசியல் நம்பகத்தன்மையை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
கடைசியாக, “தமிழ்நாட்டின் உண்மையான சொத்து அதன் மனிதவளமும் பொருளாதார அடித்தளமும் தான். அதை பாதுகாத்து வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டால் புதிய அரசு நீண்டகால வெற்றியை பெற முடியும்” என்று க்யுங்ஹூன் கிம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
English Summary
You canot rule by relying on popularity alone Korean economist advises Vijay government