அமமுக யாருடன் கை கோர்க்கும்...? தஞ்சாவூரில் டிடிவி தினகரன் கொடுத்த தேர்தல் சிக்னல்...! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுக்குழு கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், தனது பேச்சில் கட்சியின் அரசியல் அடையாளத்தையும், எதிர்கால இலக்கையும் உறுதியாக முன்வைத்தார்.
“பெரியார் பாதையில் வந்தவர்கள் நாம். ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்து பொற்கால ஆட்சி தந்த எம்.ஜி.ஆர்.

வழியில் வந்தவர்கள் நாம். ஆண் ஆதிக்க அரசியலை சவாலாக எதிர்கொண்டு சரிநிகர் சமமாக ஆட்சி செய்த ஜெயலலிதாவின் மரபை தாங்கி நிற்பவர்கள் நாம்” என அவர் பேசினார்.மேலும், “அவரது வழியைப் பின்பற்றும் நாம், எந்தவொரு தியாகத்துக்கும் தயார். இன்று அமமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி கூட்டணியாகவும், ஆட்சியமைக்கும் கூட்டணியாகவும் இருக்கும் என்று நிர்வாகிகள் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இந்த தொடர்ந்து பேசிய அவர், “நமக்கு யாரைக் கண்டு பயமும் இல்லை; பொறாமையும் இல்லை. அதனால்தான் கடந்த 8 ஆண்டுகளாக அமமுக தெளிந்த நீரோடையாக ஓடுகிறது. எந்தவித சமரசமும் இல்லாமல், ஊழலற்ற ஆட்சி உருவாக்க அமமுக உறுதியாக உள்ளது” என தெரிவித்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து பேசுகையில், “ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற என் உறுதியான முடிவே எனது தோல்விக்குக் காரணம். அதற்காக நான் ஒருபோதும் வருந்தவில்லை” என்றார். மேலும், “இந்த தேர்தலில் நாம் யாரைக் கைகாட்டுகிறோமோ, அவரே முதல்வராக வருவார்.

அது இயற்கையின் தீர்ப்பு” என கூறி கூட்டணியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.“வதந்திகளையும், பொய்செய்திகளையும் நம்ப வேண்டாம். நமது உயரம் நமக்குத் தெரியும். உங்கள் மனநிலையும் எனக்குத் தெரியும். கூட்டணியில் இடம்பெற்று 80 சதவீதம் பேர் சட்டசபைக்கு செல்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் பணிகளுக்குத் தயாராகுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொண்ட அவர், “எத்தனை சீட் கிடைக்கும் என்ற கணக்கில் அல்ல; மக்களின் நலன் எந்த முடிவில் இருக்கிறதோ, அதன்படி நான் தீர்மானம் எடுப்பேன். கவுரவமான இடம் தருபவர்களுடன், ஆட்சியில் பங்குதருபவர்களுடன் மட்டுமே கூட்டணி” என உறுதியாக கூறினார்.

மேலும், “ஏற்கனவே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். அமமுக அமைச்சரவையில் இடம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. கூட்டணி முடிவை எடுப்பதற்கு முன் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் முடிவு எடுப்பேன். அது நல்ல முடிவாக இருக்கும்” என்று டிடிவி தினகரன் உரையை நிறைவு செய்தார்.

இந்த உரையின் போக்கு மற்றும் அரசியல் சுட்டிக்காட்டுகளைப் பார்க்கும் போது, அமமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With whom AMMK join hands election signal given by TTV Dhinakaran Thanjavur


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->