22% ஈரப்பத தளர்வை ஏன் மறுக்கிறது மத்திய அரசு...? விவசாயிகளுக்கான போராட்ட குரலாக தினகரன் எழுச்சி...!
Why central government refusing 22percentage moisture relaxation Dinakaran emerges voice struggle farmers
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளை கவலைக்குள்ளாக்கும் ஒரு முக்கிய விவகாரம் குறித்து அவர் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தற்போதைய 17% ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் என விவசாயிகளும் தமிழக அரசும் மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, விவசாயிகளுக்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டில், கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், தமிழக அரசு அவற்றை முறையாகவும் முழுமையாகவும் கொள்முதல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், பல கொள்முதல் நிலையங்களில் இடவசதி இல்லாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து, விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மத்திய குழுவினரின் பரிந்துரைகள் வெளியான நிலையில், ஈரப்பத தளர்வை அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு, அவர்களை மிகுந்த வேதனையிலும் விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளதாக தினகரன் வலியுறுத்தினார்.
மேலும், வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமாகும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் நெல் கொள்முதல் ஈரப்பத சதவிகிதத்தை 17% இலிருந்து 22% ஆக உயர்த்தி உடனடியாக அறிவிக்க மத்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Why central government refusing 22percentage moisture relaxation Dinakaran emerges voice struggle farmers