கூட்டணி ஆட்சியில் பங்கு..? மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கூறியது என்ன..?
What did Selvapperundhaga say after meeting Mallikarjuna Kharge
தமிழ்நாட்டில், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது;
தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளின் காரணங்கள் குறித்து தேசியத் தலைவர் கார்கேவிடம் எடுத்துக்கூறியுள்ளதாகவும், கூட்டணி சர்ச்சை விவகாரத்தில் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கார்கேவும் கூறியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கார்கேவை பார்க்க செல்வதற்கு முன்பு பேசிய அவர், அகில இந்திய காங்கிரசுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறினார். அப்போது, கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசிய மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் முடிவு எடுக்கும் என்று பதிலளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக, வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பொதுவெளியில் திமுக மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதற்கு திமுக தரப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கடும் பதிலடி அளித்து வருகின்றனர். கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதன் பிறகும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வருவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு சென்று அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
What did Selvapperundhaga say after meeting Mallikarjuna Kharge