சென்னை உள்ள தொகுதியில் போட்டியிட விஜயதரணி திட்டமா? தவெகவில் லோக்சபா சீட்டுக்காக இப்போதே தொடங்கிய முயற்சி!
Is Vijayadharani planning to contest from a Chennai constituency Efforts to secure a Lok Sabha seat in TVK have already begun
சென்னை: அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்ட அரசியலை விடுத்து சென்னை மையப்படுத்திய அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சென்னை அல்லது அதனை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். எனினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகியான விஜயதரணி தவெகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் வாய்ப்புகள் குறைந்துள்ளன என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த கட்ட அரசியல் பயணத்தை சென்னை மையமாகக் கொண்டு தொடர அவர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக கட்சித் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள் மூலம் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது தவெகவில் அந்த இலக்கை அடைய முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விஜயதரணிக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தவெக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வேட்பாளர் தேர்வு தொடர்பான இறுதி முடிவை கட்சித் தலைமை பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Is Vijayadharani planning to contest from a Chennai constituency Efforts to secure a Lok Sabha seat in TVK have already begun