இந்திய EV சந்தையில் புதிய மைல்கல்!ஓலா, டிவிஎஸ்-க்கு டஃப் கொடுக்கும் ஏத்தர்! 7 லட்சம் விற்பனையை கடந்த ஏத்தர்!
A new milestone in the Indian EV market Ather gives tough competition to Ola and TVS Ather crosses the 7 lakh sales mark
சென்னை: இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), மொத்தமாக 7 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களான தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்ட ஏத்தர் எனர்ஜி, இந்தியாவில் பிரீமியம் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிறுவனம் 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் தனது வணிகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.
7 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ள ஏத்தர், இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஏத்தரின் ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கருதப்படுகிறது. தற்போது நிறுவனத்தின் மாதாந்திர மொத்த விற்பனையில் சுமார் 75 சதவீத பங்கை இந்த மாடல் வகிப்பதாக கூறப்படுகிறது. குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு, அதிக இடவசதி மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலை ஆகியவை வாடிக்கையாளர்களிடையே இதற்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.
2026-ஆம் ஆண்டில் ஏத்தரின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பே நிறுவனம் 1.63 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2025-ஆம் ஆண்டில் 2.15 லட்சம் யூனிட்கள் விற்பனையானதே நிறுவனத்தின் ஆண்டு சாதனையாக இருந்தது. தற்போதைய வளர்ச்சியைப் பார்க்கும்போது, 2026-ஆம் ஆண்டில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற புதிய சாதனையை நிறுவனம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏத்தரின் விற்பனை 91 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் அதன் சந்தைப் பங்கு தற்போது 17.53 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது 2025-ஆம் ஆண்டில் 16 சதவீதமாகவும், 2024-ஆம் ஆண்டில் 11.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
A new milestone in the Indian EV market Ather gives tough competition to Ola and TVS Ather crosses the 7 lakh sales mark