"ரூ.2,500 உரிமைத்தொகை..இலவச பேருந்து பயணம்.. எங்கே?" தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் பெண்கள் அதிருப்தி?
Where is the 2500 monthly allowance and free bus travel Are women dissatisfied with the TVK government first budget
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
2026–27 நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்தார். இதில் திருமண நிதி உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், மாணவர்களுக்கு நவீன சைக்கிள், ஹஜ் மானியம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
எனினும், தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்த சில முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்துவது, உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம், மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல் அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000 கல்வி வாழ்வு நிதி, குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் மருத்துவக் காப்பீடு, மாதந்தோறும் மின்கட்டணம் வசூல், 150 நாள் ஊரக வேலை உறுதித் திட்டம், சொத்துவரி குறைப்பு போன்ற வாக்குறுதிகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற கேள்வியை எழுப்பி பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் மத்தியில் ஏமாற்றம் நிலவுவதாக சமூக வலைதள பதிவுகளில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த திட்டங்கள் பின்னர் தனித்தனி அறிவிப்புகள் அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
English Summary
Where is the 2500 monthly allowance and free bus travel Are women dissatisfied with the TVK government first budget